Friday, September 12, 2014

நோய் நீக்கும் மூலிகைகள்

           நோய் நீக்கும் மூலிகைகள் :

துளசி:

 இவை வீடு, தோட்டம், நந்தவனங்களில் எளிதில் கிடைக்கும் ஒரு மூலிகை.
துளசி பட்ட நீரும் மருந்தாகும் என்ற வகையில், இந்த துளசி நீரானது உடலை மட்டுமின்றி, மனதையும் தூய்மைப்படுத்தும். துளசி இலை போட்டு ஊறிய தீர்த்தம் வயிறு சுத்திகரிக்கப்பட்டு, நல்ல ஜீரண சக்தியை தரும். "திருத்துழாய்" என்று அழைக்கப்படும் துளசிதான் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
துளசி இலைகளை நீரிலிட்டுக் கொதிக்கச் செய்து ஆவிபிடித்தால் மார்ப்புச்சளி, நீர்கோவை, தலைவலி நீங்கும். இதன் இலைகளை எலுமிச்சம்பழச் சாற்றுடன் அரைத்துப்போடப் படை நீங்கும்; விதைகளைப் பொடி செய்து ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு உண்டால் உடற்சூடு, நீரெரிச்சல் ஆகியன அடங்கும்.

கீழ்க்காய்நெல்லி:

கீழ்க்காய்நெல்லி இதனைக் கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி எனவும் குறிப்பிடுவர். மஞ்சட்காமாலைக்கு எளிய மருந்தாக இன்று பயன்பட்டு வருகின்றது.
காய்களுடன் கூடிய முழுக் கீழாநெல்லிச்செடியைத் தூயநீரில் கழுவி அரைத்து விழுதாக்கிக் கொள்ளுதல் வேண்டும். ஐம்பது கிராம் அளவுள்ள விழுதை இருநூறு மில்லி லிட்டர் எருமைத்தயிருடன் கலந்து காலை ஆறு மணியளவில் வெறும் வயிற்றில் உட்கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு மூன்று நாள் தவிராமல் உட்கொண்டால் மஞ்சட்காமலை நோய் தீரும். மருந்துண்ணும் நாளில் மோரும், மோர்ச்சோறும் உட்கொள்வது நல்லது. கீழாநெல்லி இலைகளைக் கற்கண்டுடன் சேர்த்து அரைத்து மூன்றுகிராம் அளவு காலை மாலை இருவேளை நான்குநாள் தொடர்ந்து உட்கொள்ள சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும்.


தூதுவளை: 

பிணிபல நீக்கும் கற்பக மூலிகை தூதுவளை. தூதுவளை ஒருவகைக்கொடி. தூதுவளை என இதற்குப் பெயர். தூதுவளை ஈரமான இடங்களிலும் தோட்டங்களிலும், வேலியோரங்களிலும் இயல்பாக செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும். தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. தூதுவளை, சிங்கவல்லி என வேறுபெயர்களிலும் வழங்கப்படும்.
நல்லெண்மெயில் சமைத்த இதன் இலைகளை உணவோடு சேர்த்து இருபத்தொரு நாள் உண்டு வந்தால் சுவாசகாசம் அகலும்; இளைப்பு இருமல் போக்கும். ஞானப்பச்சிலை என வள்ளலார் போற்றும் இவ்விலை குரல்வளத்தை மேம்படுத்தும்; வாழ்நாளை நீட்டிக்கும்.

குப்பைமேனி: 

மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று. குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும்.
குப்பைமேனி. இதனைத்தான் பாட்டி வைத்தியம் என்பார்கள்.
குப்பைமேனிக்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு.
குப்பைமேனி, நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்தாக விளங்கும் மூலிகைச் செடியாகும். இதன் இலைகளைக் காயவைத்துப் பொடியாக்கிப் பூசினால், படுக்கைப் புண் குணமாகும். குழந்தைகளின் வயதுக்கேற்ற அளவில் உண்ணக் கொடுத்தால் மலப்புழுக்கள் வெளியேறும்; வயிறு தூய்மையாகும்; பசியைத் தூண்டும்; இலைகளுடன் மஞ்சள், உப்புச் சேர்த்து அரைத்துப் பூசினால் சொறி, சிரங்கு நீங்கும். மேனி துலங்க குப்பைமேனி என்பது பழமொழி.


கற்றாழை:

வறண்டநிலத் தாவரமான கற்றாழையில் பலவகையுண்டு. அவற்றுள் சோற்றுக் கற்றாழையே மருந்தாகப் பயன்படுகிறது.
வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்படும் சோற்றுக்கற்றாழை முக அழகை பாதுகாக்கும் அழகு சாதனப்பொருளாக பயன்படுகிறது. கோடைகாலத்தில் சருமம் வறட்சியடையாமல் பாதுகாப்பதோடு கொப்புளங்கள், முகப்பரு போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
இதன் தோலை நீக்கிச் சோற்றுப் பகுதியைக் குறைந்தது பத்து முறையேனும் கழுவுதல் வேண்டும். அப்போதுதான் அதன் கசப்புத்தன்மை நீங்கும். நூறு கிராம் அளவு கற்றாவையின் சோற்றுப் பகுதியை எடுத்து நூறு மில்லி நல்லெண்ணெயில் இட்டு காய்ச்சித் தலைக்குத் தேய்த்துவர முடிவளரும்; இரவில் நல்ல உறக்கம் வரும். மஞ்சள் சேர்த்துச் சாப்பிட்டால் மூலச்சூடு குறையும். கற்றாழைக்குக் குமரி என்னும் வேறுபெயரும் உண்டு. பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் குமரி கண்டநோய்க்குக் குமரி கொடு என்னும் வழக்கு ஏற்பட்டது.

 
முருங்கைக்கீரை:

எளிதாகக் கிடைக்கும் சத்து நிறைந்த மூலிகை முருங்கை. வீட்டில் வளர்க்கப்படும் உணவுப்பொருள் மட்டுமன்று; நல்ல மருந்துப் பொருளும்கூட. முருங்கைப்பட்டையை அரைத்துத் தடவினால் முரிந்த எலும்பு விரைவில் கூடும்; வீக்கத்தைக் குறைக்கும். முருங்கைக்கீரை கண்பார்வையை ஒழுங்குபடுத்தும்; உடலை வலுவாக்கும், இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் கூந்தைலை வளரச் செய்வதில் இதற்குப் பெரும்பங்கு உண்டு.
 
கருவேப்பிலை:

மணத்திற்காக மட்டும் உணவில் சேர்க்கப்படும் இலையாக இதனைக் கருதக்கூடாது. ஒரு மண்சட்டியில் முந்நூறு மில்லி அளவு பசுவின்பாலை ஊற்றி வேடு கட்டுதல் வேண்டும். அதன் மீது கறிவேப்பிலையின் காம்பு நீக்கிய கொழுந்து இலைகளைப் போட்டுச் சிறுதீயில் அவித்தல் வேண்டும். அதனை விடக்கூடிய ஏற்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால் மூன்று நாளில் குணமாகும். காலை மாலை என இருவேளையும் ஐந்து கிராம் கறிவேப்பிலையைக் கழுவிச் சிறிதுசிறியாக வாயில்போட்டு மென்று விழுங்கினால் சீதபேதி இரண்டு நாளில் குணமாகும். உணவில் சேரும் சிறுநச்சுத்தன்மையை முறிக்கும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு.

கரிசலாங்கண்ணி: 

கரிசலாங்கண்ணியின் மருத்துவப்பயன் மிகப்பெரிது. இரத்தசோகை செரிமானக்கோளாறு, மஞ்சள் காமாலை முதலிய நோய்களுக்குத் கரிசலாங்கண்ணி நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. அது, கண்பார்வையைத் தெளிவாக்கும்; நரையைப் போக்கும்.
கரிசலாங்கண்ணிக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்: கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்.

 
மணத்தக்காளி: 

தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகைகளில் மணத்தககாளியும் ஒன்று.
அல்சரை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பாட்டை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது. வாய்ப்புண், குடற்பண்ணைக் குணமாக்கும்.



முசுமுசுக்கை:

முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
முசுமுசுக்கைக் கொடியின் வேரினை பசும்பாலில் ஊறவைத்து, உலர்த்தி பொடியாக்கிப் பசுவின்பால், மிளகுப்பொடி, சர்க்கரையுடன் உண்டுவந்தால் இருமல் நீங்கும்.


அகத்திக்கீரை:

அகத்திக்கீரை தாவர வகைகளிலேயே மிகுந்த சத்தான ஒன்று. இதன் தாயகம் மலேசியா. இது சிகப்பு மற்றும் வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டது.
வெள்ளைப் பூக்களைக் கொண்டது "அகத்தி' என்ற பெயர் பெறும்.
சிவந்த பூவைக் கொண்டது "செவ்வகத்தி' என்று அழைக்கப்படும்.
அகத்தி இலைச் சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்தி வர, ஒரு மாதத்தில் இருமல் விலகும்.
அகத்தி இலைகளைப் பிழிந்து சாறெடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த வயிற்று வலி தீரும். பல் சார்ந்த நோய்களைக் குணமாக்கும்.


வல்லாரை:

வால்லாரை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய தாவரமாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தன்மையுடையது.
வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. மேலும் இதனை சரஸ்வதிக் கீரை என்றும் அழைக்கின்றனர். இது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நினைவாற்றல் பெருக உதவுகிறது.
நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது.நினைவாற்றல் பெருக உதவும்.


வேப்பிலை:

வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது.. வேப்பந்தழையின் இலை கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது.
வேப்பங் கொழுந்தினைக் காலையில் உண்டு வந்தால் மார்புச்சளி நீங்கும். வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. வேப்பிலையை அரைத்துத்தடவினால் அம்மையால் வந்த வெப்பநோய் அகலும்.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...