இளமையைக் கட்டிக் காக்கும் குமரி!
இளமையைக் கட்டிக்காக்கும் வல்லமை படைத்தது சோற்றுக்கற்றாழை! இதற்கு குமரி என்று ஒரு பெயரும் உண்டு. இதை ஆங்கிலத்தில் "அலோவெரா' என்பார்கள். பெரும்பாலான அழகு சாதனப் பொருள்களில் இடம்பெற்றிருப்பது இந்த அலோவெராதான். இது சருமத்தின் மென்மைக்கும் கூந்தலின் வளர்ச்சி மற்றும் பளபளப்புக்கும் முக்கிய காரணமாகத் திகழ்கிறது.கற்றாழையில், சோற்றுக் கற்றாழை, இரயில் கற்றாழை, பேய் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, சிறுங்கற்றாழை, பெருங்கற்றாழை எனப் பலவகைகள் உண்டு.
பழங்காலத்தில் இருந்தே மக்கள் அதன் மேன்மையை உணர்ந்து மருந்தாகவும் அழகைப் பேணிக் காக்கவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். குறிப்பாக உடலைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதில் சோற்றுக்கற்றாழையின் பங்கு அலாதியானது. இதில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
சோற்றுக்கற்றாழையை சுத்தி செய்யும் முறை :
சோற்றுக்கற்றாழை மடல்களின் மேலுள்ள தோலை சீவி எடுத்து விட்டு உள்ளே காணப்படும் கொழகொழப்பான சதைப்பகுதியை, ஏழு முறை தண்ணீரில் கழுவினால் வெண்மையான நுங்கு போன்ற ஜெல் கிடைக்கும்.
சோற்றுக்கற்றாழையின் மருத்துவ பயன்கள் :
பெண்களுக்குக் கருப்பைச் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு இது சிறந்த மருந்தாகும். கருப்பையில் ஏற்படும் சூட்டினைக் குறைக்க, இதன் ஜெல்லுடன் கற்கண்டு சேர்த்து காலை வேளையில் சாப்பிட்டு வர விரைவில் குணம் தெரியும்.
மேலும் இளமையும் ஆச்சரியப்படும் விதத்தில் பாதுகாக்கப்படும். இதை மோரில் கலந்து சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி பெறுவதுடன் வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் தீரும். முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகள், முகப்பரு போன்றவையும் நீங்குகிறது. வயிற்றுப்புண், வயிற்றுவலி, உட்சூடு, நீடித்த மலச்சிக்கல் போன்றவற்றிற்கு அருமருந்தாகிறது. ஒரு மடல் அளவுள்ள சோற்றுக்கற்றாழை நுங்கை நீராகாரத்தில் கலந்து மூன்று நாள்களுக்கு அருந்திவர, சிறுநீர் நன்றாக வெளியேறும். சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதும் நிற்கும்.
குழந்தைப்பேறு வேண்டுபவர்கள், தினமும் காலையில் ஒரு மடல் அளவுக்கு கற்றாழை ஜெல்லைச் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். நீரிழிவு, அதிக எடை, ரத்த அழுத்தம், அல்சர், ஆஸ்துமா, ஹிஸ்டீரியா, தாம்பத்ய குறைபாடுகள், முறையற்ற மாத விலக்கு, கை, கால்வலிகள், மூட்டுவலி மற்றும் முதுகுவலி போன்ற பலப் பிரச்னைகளுக்கும் இதைப் பயன்படுத்தி தீர்வு காணலாம்.
சோற்றுக்கற்றாழை நுங்குடன் பால், கருப்பட்டி, முந்திரி, திராட்சை, ஏலக்காய் கலந்து பாயசமாகவும் செய்து சாப்பிடலாம். வாய்க்கு ருசியாகவும் இருக்கும்; உடலுக்கும் தேவையான பலன் கிடைக்கும்.
சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை முகத்தில் தடவி வர, முகம் பளபளப்பாக மின்னும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதுடன் சருமத்திற்கு பாதுகாவலனாகவும் இருக்கிறது. இரவில் தூங்குவதற்கு முன்பாக இதன் நுங்கை கண்களின் மீது வைக்க, கண் எரிச்சல், கண் வலி போன்றவை நீங்குவதுடன் உறக்கமும் நன்றாக வரும்.
கற்றாழையில் புரதச்சத்து அதிகமிருப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. முடி உதிர்தல், பொடுகைத் தடுப்பதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் உள்ள விஷங்களை வெளியேற்றுவதில் கணிசமான பங்கு வகிக்கிறது. மேலும் வீட்டில் ஏற்படும் சிறு தீக்காயங்கள், ஆண்கள் ஷேவிங் செய்யும்போது ஏற்படும் கீறல்களுக்கு உடனடி நிவாரணியாக கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம்.
இந்தச் சோற்றுக்கற்றாழையை வீட்டின் ஜன்னலோரத்தில் வைத்து வளர்ப்பதால் சிறந்த கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது. இத்தனைச் சிறப்புகளுடன் இளமைக்கு வழிகாட்டியாகத் திகழும் சோற்றுக்கற்றாழையை, நம் புழக்கடை மருந்தகம் என்றே சொல்லலாம்!

No comments:
Post a Comment