நன்மைகள் பல தரும் பயறு :
சாதாரணமாய் 20-25% புரதச்சத்தைத் தன்னுள் கொண்டிருக்கும் பயறுகள், வளரும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவை. அதன் அவசியம் புரியாமல் ஒதுக்கியதில்தான், எத்தனையோ ஊட்டச்சத்து பானங்கள் கலர்கலராய் விளம்பரங்களுடன் விடாது நம்மை விரட்டி வீட்டுக்குள் வந்து விட்டன. உயரமாய் வளர வைப்பேன்; புத்திசாலியாக்குவேன்; என உள்வரும் அத்தனை ஊட்ட உணவுகளுக்கும் சிறிதும் சளைத்ததல்ல இந்த பயறுகள். நோய் எதிர்ப்பாற்றல் நன்றாயிருக்க சரியான பயறு உணவு தினசரி அவசியம். பயறுகள் ஸிக்ஸ் பேக் கனவான்களுக்கான முக்கிய உணவு. தசைகளை இறூக்கமாக வளர்ப்பதற்கு பயறு அவசியம். கூடவே உடற்பயிற்சியும் வேண்டும். அதை மறந்து, “சார்! தினம் முளை கட்டி பல பயறு சாப்பிடுகிறேன். ஸிக்ஸ் பேக் வரலையே” –என்று கேட்டால், சத்தமாய் ஏப்பமோ இல்லை வேறு எதுவுமோ வரலாம். ஸிக்ஸ் பேக் வராது. உணவும் உடலுழைப்பும் ஒன்றாய் சேர்ந்தால் மட்டுமே அரோக்கியமும் அழகும் வசப்படும். பயறு விஷயத்திலும் அப்படித்தான்.
சர்க்கரை நோயாளிகளின் அலாதிப் பசியைப் போக்குவதிலும், அதனால் திடீர் சர்க்கரை உயர்வு(hyperglycemia) ஏற்படாமல் பார்த்துக் கொள்வதிலும் சிறப்பானவை. சர்க்கரை நோயில், இன்று வலியுறுத்தப்படுவது லோ கிளைசிமிக் உணவுகளைத்தான். பயறுகள் லோ கிளைசிமிக் தன்மை கொண்டவை. மாலை வேளையில் பசியுடன் இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு முளைகட்டிய பாசிப்பயறு சுண்டலோ, சிவப்பு நிற மூக்குக் கடலைச் சுண்டலோ சிறந்த சிற்றுண்டிகள். அவை உடனடி பசியையும் குறைப்பதுடன், இரவில் அதிக பசியில், அதிக உணவை சாப்பிட்டு காலையில் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்து கலவரப்படுத்தாமல் இருக்க உதவிடும்.
பெரும்பாலான பயறுகள் கொழுப்புச் சத்து குறைவானவை..அல்லது சற்றும் இல்லாதவை. அதிக கொழுப்புச் சத்து உள்ள நபர்கட்கு, அன்றாட உணவுத் தேர்வில் பயறுகள் இருக்கும் போது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு (low density lipo protein-LDL)கிட்ட்த்தட்ட 22% குறைவதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
பாசிப்பயறு, கொண்டைக்கடலை, இவற்றை முளைகட்டிச் சாப்பிடுவது அதன் புரதச்சத்து உடலில் விரைவாக சேர ஏதுவாகும். அதே நேரத்தில் முளை கட்டிய பயறுகள் உடல் எடை குறைத்திடவும் உதவிடும். ஆதலால், வளர வேண்டிய சிறு குழந்தைகளுக்கு வருத்து பொடித்த பயறுக் கஞ்சியும், உடல் எடை குறைய டயட்டில் இருக்கும் நபர்கட்கு முளைகட்டிய பயறும் நலம் பயக்கும். பால் புரதத்தை விட, புலால் புரதத்தை விட, பயறுப்புரதங்கள் விலை குறைந்தவை; உடலில் முழுமையாய் அதிகமாய் உட்கிரகிக்கப்படுபவை. குறிப்பாய் பாசிப்பயற்றின் protein efficiency ratio பிற புலால் புரதங்களைக் காட்டிலும் துரிதமானது.

No comments:
Post a Comment